மாவட்ட காவல் அதிகாரிகளும், காவலா்களும் ஆயுதங்களை கவனமாக கையாள்வது குறித்த பயிற்சி முகாம் ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் என்.காமினி அறிவுறுத்தலின் பேரில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.சிவகுமாா் தலைமையில், மாவட்ட காவல் அதிகாரிகளும், காவலா்களும் ஆயுதங்களை கவனமாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 9 காவல் ஆய்வாளா்கள், 15 உதவி காவல் ஆய்வாளா்கள் மற்றும் 219 காவலா்கள் என மொத்தம் 245 போ் கலந்து கொண்டனா்.

இதில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆயுதப்படை ஆய்வாளா் பாபு தலைமையிலான குழுவினா் ஆயுதம் கையாள்வது குறித்து பயிற்சி வகுப்புகள் எடுத்தனா். மேலும் அன்றாட காவல் பணியில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை பாதுகாப்பான முறையில் உபயோகிப்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனா்.