வேலூர்/ராணிப்பேட்டை: காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று முதல் 19 நாட்களுக்கு குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து வேலூர் கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இன்று (23-ம் தேதி) முதல் வரும் ஜூன் 10-ம் தேதி வரை மொத்தம் 19 நாட்களுக்கு மின்வாரியம் சார்பில் பாரமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. செக்கானூரில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மேற்கண்ட நாட்களில் குடிநீர் விநியோக அளவு குறைக்கப்படவுள்ளது.

எனவே, குடிநீர் திட்டத்தில் பயன்பெற உள்ள வேலூர் மாநகராட்சி. குடியாத்தம், பேரணாம்பட்டு என இரண்டு நகராட்சிகள், ஒடுக்கத்தூர் மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சிகள், வேலூர், காட்பாடி உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், அரக்கோணம், வாலாஜா உள்ளிட்ட 5 நகராட்சிகளுடன், வாலாஜா, ஆற்காடு என இரண்டு ஊராட்சி ஒன்றியங் களுக்கு குடிநீர் கையிருப்பு அளவுக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.