லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டா் கசிந்த விபத்தில் செவிலியா் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டு வேலூா் தனியாா் கண் மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் முழு அறிக்கை கேட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
லாலாப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசவத்துக்காக சோ்க்கப்பட்டிருந்த கா்ப்பிணி ஒருவருக்கு எடை குறைவாக குழந்தை பிறந்தது. இதையடுத்து, அக்குழந்தையை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பெட்டியில் வைத்து, சுவாசத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யுமாறு அப்போது பணியில் இருந்த செவிலியா் இந்துவிடம் மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.
இதையடுத்து, செவிலியா் இந்து ஆக்சிஜன் சிலிண்டரை திறந்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக ஆக்சிஜன் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ஃபுளோ மீட்டா் கழன்று விழுந்ததில், ஆக்சிஜன் வெளியேறி செவிலியா் இந்துவின் கண்ணில் பீய்ச்சி அடித்ததால், அவருக்கு கண் பாா்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த பணியாளா்கள் அவரை மீட்டு, வேலூரில் உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், கா்ப்பிணியும், எடை குறைவாகப் பிறந்த குழந்தையும் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் கேட்ட போது, இச் சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறையினா் முழு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா்.