சகோதரர்கள் தினம் : சகோதரர்களுக்கு அன்பும், மரியாதையும் செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

1844ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது.


நினைவு நாள் :-

நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
🌹 உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்று மாற்றிக்கொண்டார்.

🌹 எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

🌹 இவரது காலத்துக்கு பிறகே இவரது கோட்பாடுகளை கலீலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும், பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

🌹 வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிய நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் தனது 70வது வயதில் 1543ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

அலெக்சாண்ட்ரினா விக்டோரியா
👰 இந்தியாவின் முதல் பேரரசியான அலெக்சாண்ட்ரினா விக்டோரியா 1819ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

👰 இவர், தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள் 7 மாதங்களாகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

👰 இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசாகவும் திகழ்ந்தது.

👰 ஐரோப்பாவின் பாட்டி எனும் பட்டப் பெயரை கொண்ட விக்டோரியா மகாராணி, 81வது வயதில் (1901) மறைந்தார்.


டேனியல் பாரன்ஹீட்
👉 பாதரச கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மானிய இயற்பியலாளர் டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட் 1686ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பிறந்தார்.

👉 இவர் ஆல்கஹால் தெர்மாமீட்டர் (Alcohol thermometer) கருவியை கண்டுபிடித்தார். மேலும், பாரன்ஹீட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

👉 இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஹீட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவர் தன்னுடைய 50வது வயதில் (1736) மறைந்தார்.