1865ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் நெதர்நாலந்தில் பிறந்தார்.

1886ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மேற்கு வங்காளம், பர்த்வான் மாவட்டத்தில் சுபல்தகா கிராமத்தில் பிறந்தார்.

2001ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ரிக் வைஹன்மாயர்(Erik Weihenmayer) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.


முக்கிய தினம் :-

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் ஒவ்வொரு வருடமும் மே 25ஆம் தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் இந்த உலகத்தின் எதிர்கால சொத்துக்கள் ஆவார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.


உலக தைராய்டு தினம்
ஒவ்வொரு ஆண்டும் உலக தைராய்டு தினம் மே 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் இந்நோய் ஏற்படுகிறது. தைராய்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தைராய்டு சர்வதேச கூட்டமைப்பு 2007-ஆம் ஆண்டில் இருந்து இத்தினத்தை அனுசரித்து வருகிறது.


நினைவு நாள் :-

டி.எம்.சௌந்தரராஜன்
🎶 தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் 1923ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார்.

🎶 2003இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தனது 91வது வயதில் 2013ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

மு.சி.பூர்ணலிங்கம்
தமிழ் நூல்களை மொழிபெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார்.

இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார்.

தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களோடு கூறியுள்ளார். சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் விளக்கியுள்ளார்.

தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை தனது 81 வயதில் (1947) மறைந்தார்.