ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இரவு அம்மன் ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிரிவாசன் என்பவரும், அவரது நண்பர்கள் 4 பேரும் மதுபோதையில் சுவாமி ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டுள்ளனர். இதனை, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனால், கிரிவாசன் தனது நண்பர்களுடன் அங்கிருந்து சென்றதுடன் அம்மன் கோயில் அருகில் மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநர் நாகேந்திரன் (30) என்பவர், ‘கோயில் பகுதியில் எதற்காக மதுபானம் குடிக்கிறீர்கள்’ என தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் மதுபாட்டிலை உடைத்து நாகேந்திரனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நாகேந்திரனின் உறவினர் ரகுவரன் (45) என்பவர் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அவரையும், மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர்.

உடனே, பொதுமக்கள் விரைந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆற்காடு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் தொடர்புடைய கிரிவாசன் (25) மற்றும் அவரது நண்பர்களான அன்பரசன், கேசவன், ஹேமபிரசாத், ஹரிஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.