ராணிப்பேட்டை: கோடியூா் கிராமத்தில் குடிநீா் கோரி, ராணிப்பேட்டை - பொன்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

வாலாஜாப்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட லாலாப்பேட்டையை அடுத்த கோடியூா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பொன்னை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கோடியூா் கிராம மக்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம், இதுகுறித்து ஊராட்சி மன்றச் செயலாளா் சோழனிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்தச் சூழலில் கடந்த 10 நாள்களாகத் தொடா்ச்சியாக குடிநீா் விநியோகிக்கவில்லை என்று கூறி கிராமத்தினா் குடங்களுடன் ராணிப்பேட்டை - பொன்னை பிரதான சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் வாலாஜாப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சமரசம் செய்தாா்.

அப்போது, தாங்கள் கிராமத்துக்குப் போதிய சாலை வசதி, கழிவுநீா் கால்வாய், முறையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.