ராணிப்பேட்டை வாரச்சந்தையில் நேற்று சமூக இடைவெளியை மறந்து ஆடு வாங்க ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே வாரச்சந்ைத மைதானம் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று காய்கறி, மளிகை மற்றும் ஆடு வியாபாரம் நடப்பது வழக்கம். ஏராளமான சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து பொருட்களை வாங்கிச்செல்வர். இந்த வாரச்சந்தையன்று லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கும். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் இறுதியில் வாரச்சந்தைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சந்தை திறக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா 2வது அலை வேகமாக பரவியதன் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வாரத்தின்போது மீண்டும் வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்ததையடுத்து வாரச்சந்தை திறக்க கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வாரச்சந்தை நடந்தது. இதையொட்டி ஏராளமான காய்கறிகள், மளிகை மற்றும் ஆடுகளுடன் வியாபாரிகள் திரண்டனர். ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க சந்தையில் குவிந்தனர். குறிப்பாக ஆடுகளை வாங்க ஏராளமானோர் வாகனங்களுடன் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சமூக இடைவெளி மறந்து ஒரே இடத்தில் பலர் முகக்கவசம் அணியாமலும் திரண்டிருந்தனர். மேலும், மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இதுபோன்ற கூட்டத்தால் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மளிகை மற்றும் காய்கறி வாங்குவதற்காக இவ்வளவு கூட்டம் வரவில்லை. ஆடுகளை வாங்குவதற்காகத்தான் கூட்டம் அலைமோதியது. எனவே ஆடு விற்பனையை மட்டும் சில வாரங்களுக்கு தவிர்க்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு ஆடு விற்பனையை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.