ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் காய்கறி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், உழவர் சந்தைகளில் காய்கறிகளை விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபம் குறித்தும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான மானியத் திட்டங்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் உத்தரவின்பேரில், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சீனிராஜ் மேற்பார்வையில் ஆற்காடு தாலுகா கூரம்பாடியில் விவசாயிகளுக்கு உழவர் சந்தையின் செயல்பாடுகள், மற்றும் காய்கறிகள் விற்பனையில் கிடைக்கும் லாபம், சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்தும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான மானியத்திட்டங்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சீனிராஜ் கூறுகையில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உழவர் சந்தைகளுக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக விதைகள், உயிர் உரங்கள், சாகுபடி செலவீனம், சொட்டுநீர் பாசனம் ஆகிய திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சிறு விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது’ என்றார். இதில், ஆற்காடு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் யோகேஸ்வரன், குருசர்மா, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மகேஷ், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.