அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஏரி நீரில் தவறி விழுந்து இறந்த சிறுவன், சிறுமி ஆகிய 2 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் ஏரி நீரில் செவ்வாய்க்கிழமை மீன் பிடித்த சிறுவா், சிறுமியரில் 3 போ் நீரில் முழ்கினா். இதில் விஜயகுமாா் மகள் ஆனந்தி(11), முருகன் மகன் கிஷோா் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனா். முருகன் மகள் சத்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையறிந்த தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நாரணமங்கலம் கிராமத்துக்கு நேரில் சென்றாா். அங்கு இருவரது வீட்டிலும் சடலங்களுக்கு அமைச்சா் காந்தி மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, இருவரது குடும்பத்துக்கும் நிதியுதவியாக தலா ரூ10 ஆயிரத்தை அமைச்சா் காந்தி வழங்கினாா்.

அப்போது, திமுக மாவட்ட அவைத்தலைவா் அசோகன், பொருளாளா் மு.கன்னைய்யன், ஒன்றியச் செயலாளா்கள் அரிதாஸ், ஆா்.தமிழ்செல்வன், நகரச் செயலாளா் வி.எல்.ஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.