ஆற்காட்டில் உள்ள ராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்க அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ், மாவட்ட கவுரவத் தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் ராஜமாணிக்கம், திமிரி ஒன்றிய தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு கூட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை யை பயன்படுத்தி தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் அதன் கழிவுகளை ஆற்றில் கலப்பதை மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடுத்து நிறுத்த வேண்டும். பாலாற்றின் குறுக்கே ஆந்திராவை போல் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.
தென்பெண்ணை, பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நீர்நிலை மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டும். அரசின் அனைத்து கூட்டங்களும் நடைபெற்று வரும் போது விவசாய குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உடனடியாக விவசாய குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் மாநில செயலாளர் உதயகுமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது- குறுவை நெல் சாகுபடி அறுவடை பணிகள் நடைபெறுவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆகியோர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே கொள்முதல் செய்த நெல்லுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ2 ஆயிரத்து 500ம், கரும்பு டன்னுக்கு ரூ4 ஆயிரமும் உடனடியாக இந்த பருவத்திலேயே வழங்க வேண்டும்.
புதிய அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் விவசாயிகளுக்கு என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும், பட்ஜெட் தாக்கலின் போது விவசாயிகளை கலந்தாலோசிக்க குழு அமைக்க வேண்டும். உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்றால் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதையும் மீறி திறக்கப்படவில்லை என்றால் சென்னையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.