அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்...!!
அமைவிடம் :

இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 9வது தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 72வது தேவாரத்தலம் ஆகும். இத்தலத்தில் இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு 'அக்னீஸ்வரம்" என்று பெயர் வந்தது. 

மாவட்டம் : 

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்.

எப்படி செல்வது? 

திருச்சி, தஞ்சையிலிருந்தும், திருக்கண்டியூர் திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. திருவையாறு - கல்லணை சாலையில் திருக்காட்டுப்பள்ளி உள்ளது.

கோயில் சிறப்பு : 

இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. லிங்கத்தின் சிரசு மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றத்தைக் காணலாம்.

அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது.

இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர்.

இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். 

நாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. நவகிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. அனைத்து நவகிரகங்களும் 'ப" வடிவில் அமைந்துள்ளன.

இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியை பார்க்கலாம்.

கோயில் திருவிழா : 

மாசி மகம், பங்குனி பெருவிழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

வேண்டுதல் : 

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், செல்வச்செழிப்புடன் திகழவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வணங்குகின்றனர்.

இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.

நேர்த்திக்கடன் : 

பிரார்த்தனைகள் நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் எய்துவர்.