சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகைகளை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோயில் உதவி ஆணையர் ஜெயா, திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சுப்பிரமணியம், கோயில் தீர்த்தகாரர் கேகேசி.யோகேஷ் ஆகியோரது முன்னிலையில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் கண்காணிப்பாளர் விஜயன், அரக்கோணம் ஆய்வர் பிரியா, திருத்தணி ஆய்வர் நிர்மலா ஆகியோரது மேற்பார்வையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 16 லட்சத்து 85 ஆயிரம் கிடைத்தது. மேலும், 122 கிராம் தங்கம், 116 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்தது.