தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 900 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணி மாறன் தெரிவித்தார். 
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இணை நோய்களான சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளைத் தாமதமின்றி வழங்க மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைகளுடன் கூடிய மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் தாலுகா கொடைக்கல் கிராமம் கலை நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் வாலாஜா தாலுகா கரடிகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு இடங்களைச் சார்ந்து வசிக்கும் சர்க்கரை மற்றும் ரத்தகொதிப்பு நோயாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. 

இதற்கான பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், மற்றும் கிராம தன்னார்வ பெண்கள் குழுவினர் என மொத்தம் 17 பேர் கொண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 900 நபர்களுக்குச் சிகிச்சைகளுடன் கூடிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணிப் பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் கூறுகையில், தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ம் தேதி தொடங்கி வைத்தார். 
ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின் பேரில், சோளிங்கர் தாலுகா கொடைக்கல் கிராமம், வாலாஜா தாலுகா கரடி குப்பம் கிராமம் ஆகிய இடங்களில் இதுவரை சர்க்கரை மற்றும் ரத்தகொதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 900 பேருக்குச் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத் திட்டமானது ராணிப் பேட்டை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 

இதற்கான திட்டமிடல் பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் தொடங்கப்படும். அதேபோல், டயாலிசிஸ் செய்யும் நபர்களுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைகளும் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.