ராணிப்பேட்டை: செப்., 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், துாய்மை செய்ய தலா 2,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, வேலுார் உள்ளிட்ட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு தமிழக அரசு உத்தரவுப்படி, செப்., மாதம் 1 ம் தேதி தமிழகத்தில் 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்புக்கள் மட்டும் நடத்தப்பட உள்ளது. 
இதற்காக பள்ளி வளாகம், கழிவறை, வகுப்புக்களை துாய்மை செய்ய ஒரு பள்ளிக்கு 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 123.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்து முடிக்க வேண்டும். இதை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளை துாய்மை செய்யும் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று ஆய்வு செய்தார்.