அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்..!!

அமைவிடம் :

அருள்மிகு கோதண்டராமர் கோயில் அரியலூரில் அமைந்துள்ள வைணவ கோயிலாகும். இங்குள்ள பெருமாள் கோதண்டராமசாமி என அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயில், மிகத் தொன்மை வாய்ந்தது. இங்குள்ள ராம விக்கிரகம், பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டது.

மாவட்டம் :

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், அரியலூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

இத்திருத்தலம் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்திலிருந்து அரியலூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. 

கோயில் சிறப்பு :

கோதண்டராமசாமி கோயிலில் உள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். தசாவதாரங்களும் இக்கோயிலில் உள்ள தூண்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. மச்ச, கூர்ம, கல்கி, கிருஷ்ண, வராக, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, வாமன என பத்து அவதாரங்களும் இக்கோயிலில் தசாவதார மண்டபத்தில் சிற்பமாக மிக நேர்த்தியாகக் காட்சியளிக்கின்றன. 

ஒவ்வொரு அவதாரத்தின் சிற்பங்களும் ஆறு அடி உயரத்திற்கு இருக்கின்றன. இந்த பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரமூர்த்தி, இந்த ஊர் மக்களின் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். 

மலர் மகளுக்கு மட்டும்தான் ராமாவதாரத்தில் இடம் உண்டு என்றாலும் இத்தலத்தில் பூமகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே உள்ள ராம விக்கிரகம் பூமித்தாயால் சுமந்து தரப்பட்டது என்பதுதான் அது. 

கோதண்டராமர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி மூலவரையும், உற்சவரையும் தரிசிக்கும்போது மனம் நிறைகிறது. அலமேலு மங்கைத் தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

கோயில் திருவிழா :

இக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனி, பிரம்மோற்சவம் போன்றவை கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது நாச்சியார் திருக்கோலத்துக்குப் பின், அருள்மிகு கோதண்டராமசாமி, மோகினி அலங்காரத்துடன் எழுந்தருளி, திவ்ய ரூபதரிசனம் தருகிறார்.

வேண்டுதல் :

கோதண்டராமரை தரிசித்தால் குறையில்லாத மணவாழ்வு அமையும். முகூர்த்த நாட்களில் இத்திருக்கோயில் தலத்தில், நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சியாகும். எனவே, அனைவரும் திருமணத்தடை நீங்க இங்கு மனதார பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் திருமஞ்சனம் செய்தும், துளசி மாலை சாற்றியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.