போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாக உள்ள முத்துக்கடை சந்திப்பு பகுதியில் பொதுக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனம், சிப்காட் தொழிற் பேட்டை, சிட்கோ தொழில் வளாகம், சிப்காட் பகுதிகள் 1, 2, 3 என மூன்று பகுதிகள் உள்ளன. மொத்தமாக இங்குப் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இதன்காரணமாக ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பு வழியாகத் தினமும் ஆந்திரா, கர்நாடகா, சென்னை மும்பை, வேலூர், அரக்கோணம், சித்தூர், திருவண்ணாமலை போன்ற பல்வேறு பெருநகரங்களுக்கு அதிகளவில் பேருந்துகள், லாரிகள், கனரகவாகனங்கள் பல்லாயிரக்கணக்கில் சென்று வருகின்றன.

அவ்வாறு சென்று வருவதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிபிரமுகர்கள் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாகத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். 

எனவே போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாக உள்ள ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பு பகுதியில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்கு மறுப்பு தெரிவித்து புதிய பேருந்து நிலையம் அல்லது வாரசந்தை மைதானத்தில் நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.