அரக்கோணம் அருகே பச்சையம்மன் கோயில்களில் அம்மன் தாலி , உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அரக்கோணம் அவிநாசிகண்டிகை பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் கோயில் உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்த பின்னர் நிர்வாகத்தினர், கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். 

நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோயிலில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. அம்மன் கழுத்தில் இருந்த தாலியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதேபோல் தக்கோலம் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயிலிலும் நேற்றுமுன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் பூட்டு உடைத்து வளாகத்தில் இருந்த உண்டியலை திருடி சென்றுள்ளனர். 

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். 

2 கோயில்களில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.