ராணிப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால் நடைகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக முகத்துக்கடை, வாலாஜாரோடு, அம்மூர்ரோடு, பழைய புதிய பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ராஜேஸ்வரி திரையரங்க சந்திப்பு, பஜார், வண்டி மேட்டு சாலை, காந்தி சாலை, நவல்பூர், காரைக்கூட்ரோடு மற்றும் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் உள்ள அனைத்து பிரதான சாலைகளின் நடுவே கால் நடைகள் நின்று கொண்டும் அங்கும் இங்கும் திரிந்துகொண்டும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளன.

இதனால் தினமும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர், சில நேரங்களில் திடீர் திடீரெனச் சாலையின் குறுக்கே பாயும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாகிவருகிறது. கால் நடைகளின் தொல்லைகுறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் தீர்வு காணப்பட வில்லையென அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

எனவே ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இது தொடர் பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கால் நடைகளை அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.