ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்ப தாவது :
மண்புழுக்கள் மட்கக் கூடிய கழிவுப் பொருட்களை உணவாக உட்கொண்டு அதன் குடல் பகுதியில் நொதிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் செரிக்கப்பட்டு வெளியேறும் கழிவே மண்புழு உரம் ஆகும்.

இந்தியாவில் 500 வகையான மண்புழுக்கள் உள்ளன. இருந்தாலும் யூட்ரி லஸ் யூசினியே , எய்சீனியா போடிடா , பெரியோனிக்ஸ் போன்ற மண்புழுக்களே அதிகமாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தழை , மணி , சாம்பல் சத்து மட்டுமல்லாது நுண்ணூட்டச் சத்துக்களும் மண்புழு உரத்தில் அடங்கியுள்ளன. இதிலுள்ள சத்துப்பொருட்கள் பயிர்களால் எளிதில் கிரகிக்கப்படும் நிலையிலும் உள்ளது.

மண்புழு உரத்தில் காணப்படும் அங்கககார்பன் , தழைச்சத்து , மணிச்சத்து , சாம்பல் சத்து , சோடியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் , தாமிரம் , இரும்பு , துத்தநாகம் , கந்தகம் ஆகிய பொதுவான சத்துக்களை பரிந்துரைக்கப் படும் அளவு பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.ராமன் கூறியுள்ளார் .