வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் , மாவட்டத் தின் தலைநகராகவும் , சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. இங்கு பெல் கம்பெனி , சிப்காட் பகுதிகளில் தோல் , ரசாயனம் உள்பட ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது . மேலும் கலெக்டர் அலுவலகம் , ஆர் டிஓ அலுவலகம் , நீதிமன்றம் , டிஎஸ்பி அலுவலகம் , 4 காவல் நிலையங்கள் , வட்டாரபோக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவையும் உள்ளது. புதிதாக தற்போது 118 கோடியில் கலெக்டர் அலுவலகமும் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் .

ராணிப்பேட்டையில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களும் , முத்துக்கடையில் பெரிய அளவிலான நிழற்கூரையும்உள்ளது. இந்நிலையில் வேலூரில் இருந்தும் , ஆற்காடு , ஆரணியில் இருந்து ஏராளமான அரசு மற்றும் விரைவு பஸ்கள் ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு சென்று வருகிறது. அதேபோல் சென்னையில் இருந்து வேலூர் , பெங்களூர் , ஓசூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகிறது. ஆனால் இந்த பஸ்கள் எதுவும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்லாமல் பைபாஸ் சாலையிலேயே சென்றுவிடுகிறது. 

இதனால் ராணிப்பேட்டையில் உள்ள பெண்கள் , கர்ப்பிணிகள் , முதியவர்கள் , குழந்தைகள் , நோயாளிகள் உள்ளிட்டோர் வெளியூருக்கு செல்லும்போதும் , வெளியூரில் இருந்து இரவு , பகல் நேரங்களில் ஊருக்கு திரும்பும்போதும் கடும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . 

இதனால் அவர்கள் ராணிப்பேட்டையிலிருந்து வாலாஜா அல்லது ஆற்காடு நகரங்களுக்கு ஆட்டோவில் அதிகபணம் கொடுத்து சென்று அங்கிருந்து சென்னை , வேலூர் போன்ற பெரு நகரங்களுக்கு செல்கின்றனர் . மேலும் அங்கிருந்து இரவு நேரங்களில் ஊர்திரும்பும் பெண்கள் , முதியவர்கள் போதிய வாகனம் கிடைக்காமல் கிடைக்கும் வாகனத்தில் ஏறி நள்ளிரவில் கடும் அச்சத்துடன் ராணிப்பேட்டைக்கு வருகின்றனர் . 

எனவே பெண்கள் , முதியவர்கள் குழந்தைகள் நலன் கருதிபைபாஸ் சாலையில் செல்லும் அனைத்து பஸ்களையும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை நிர்வாகம் , அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .