Halls that do not comply with government regulations will be sealed 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்களுக்கு அபராதத்துடன், சீல் வைக்கப்படும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், தங்களது மண்டபங்களில் திருமணங்களை நடத்தும் இரு வீட்டாரையும் அழைத்து தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின்படி, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி அதிக கூட்டம் கூடுவதை தவிர்த்திட வேண்டும் என முன்கூட்டியே தெரிவித்து மண்டபத்தை வாடகைக்கு விட வேண்டும்.

தற்போது முகூர்த்த மாதம் என்பதால் பெரும்பாலான மண்டபங்களில் திருமணங்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் அரசின் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அதிக அளவில் கூட்டங்கள் இருப்பதும், சமூக இடைவெளியின்றி, முககவசம் அணியாமல் இருப்பதும் கண்டறியப்படுகிறது. இது குறைந்து வரும் நோய்த்தொற்றை மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


எனவே திருமண மண்டப உரிமையாளர்கள் முழு பொறுப்பாக கருதப்படுவார்கள். ஆகவே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டப உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதித்து, சீல் வைக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.