மாம்பாக்கம் கிராமத்தில் இயற்கை முறையில் இடுபொருட்கள் தயாரித்தல் பயிற்சி வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் தலைமையில் நடந்தது . உடன் , வேளாண்மை அலுவலர் திலகவதி . 
கலவை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் வேளாண் பயிர்களுக்கான இடுபொருட்கள் தயாரித்தல் பயிற்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் தலைமை தாங்கி இயற்கை விவசாயத்தின் நன்மைகள் , இயற்கையான பயிர்களின் முக்கியத்துவம் , ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார். 

இயற்கை முறை வேளாண் பயிர்கள் தயாரித்தல் மற்றும் மண் வளங்களை காக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அலுவலர் திலகவதி விளக்கினார் . தொடர்ந்து விவசாயி மாசிலாமணி என்பவர் , பஞ்சகவ்யம் தயாரிப்பு முறைகள் , 5 வகை செடிகளை கொண்டு இயற்கை முறை பூச்சிவிரட்டி தயாரித்தல் , மீன் அமிலம் தயாரித்து பயிர்களுக்கு வழங்குதல் , அதில் சக்தி பற்றியும் விளக்கினார்.

மற்றொரு விவசாயியான சரவணன் , கழிவு சிதைப்பான் கொண்டு வளர்ச்சி ஊக்கி தயாரித்தல் பற்றி விளக்கினார் . 

இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, உதயகுமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சசிகலா நன்றி கூறினார்.