சேத்துப்பட்டு ரயில் நிலைய நடைபாதையில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணை ரயில்வே போலீசார் மாஸ்க் அணிய அறிவுறுத்தியிருக்கிறார்கள். அந்தப் பெண் மாஸ்க் அணிந்த பிறகு காவலர்களைப் பார்த்து பாட்டு பாடி நடனம் ஆடியிருக்கிறார். கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் புறநகர் ரயில்கள் மீண்டும் பொதுமக்கள் சேவைக்கு இயக்கப்படுகின்றன. ரயில் நிலையங்களிலும், பயணத்தின் போதும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், பயணிகள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் ஸ்பாட் அபராதமாக ரூ. 500 வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் ரயில்வே பாதுகாப்பு போலீசார், டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் நின்று கொண்டிருந்தார்.
அதை கண்ட ரயில்வே போலீசார் அவரை மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தினர். போலீசார் சொல்லியும் அவர் மதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தன்னை எச்சரித்த பெண் போலீசாரை பார்த்து, ” விரட்டி விரட்டி வெளுக்க தோணுது” என்ற சினிமா பாடலை பாடி டான்ஸ் ஆடி கடுப்பேற்றினார்.

இந்நிலையில் அங்கு வந்த கூடுதல் போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணை கண்டித்தனர். ஆனாலும், அவர் தொடர்ந்து வாக்கு வாதம் செய்த நிலையில் மாஸ்க் அணியாமல் இருந்ததற்கு அபராதம் வசூலித்து அனுப்பினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.