Public delight in Ranipettai, relocation of Tasmac liquor store

ராணிப்பேட்டை காந்திசாலையில் இருந்த டாஸ்மாக் கடையை நேற்று வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக அங்கிருந்த மதுபாட்டில்கள் வேனில் ஏற்றப்பட்டது. 
ராணிப்பேட்டை காந்தி சாலையில் டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்த கடை போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. குறிப்பாக இவ்வழியாக வாரச்சந்தை, கோயில்கள், பள்ளி, கல்லூரி மற்றும் டியூசன்களுக்கு என ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

மாலை நேரங்களில் டாஸ்மாக் அருகே சாலையோரம் தங்கள் டூவீலர்களை நிறுத்தி ஆங்காங்கே சிலர் மது குடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்துள்ளது . மேலும் மதுபோதையில் அவ்வழியாக போவோர், வருவோரையும் அவர்கள் கேலி கிண்டல் செய்து வந்தார்களாம். எனவே இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள், அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். 

அதன்பேரில் இந்த கடையை ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம் உள்ள ஒரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை அந்த கடையை மாற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக வேன்கள் வரவழைக்கப்பட்டு அதிகாரிகள் மேற்பார்வையில் மதுபாட்டில்கள் மற்றும் பொருட்களை காலி செய்து ஏற்றிச்சென்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.