அரக்கோணம்:லாரி மோதி இறந்த விவகாரத்தில் சரியாக வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து பாணாவரத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே குப்பக்கல் மோட்டூரை சேர்ந்தவர் முனிவேல், 40. தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஒன்பதாம் தேதி பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு பைக்கில் திரும்பிய போது லாரி மோதி படுகாயமடைந்தார்.அவரை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இன்று காலை 10:00 மணிக்கு இறந்தார். பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதில், விபத்துக்கு காரணமான லாரி, டிரைவர் விவரங்களை குறிப்பிடாமல் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே போலீசார் இவ்வாறு செய்கிறார்கள் என்பதால் அவரது உறவினர்கள் மதியம் 1:00 மணிக்கு பாணாவரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து மாலை 5:00 மணிக்கு மறியலை கைவிட்டனர்.