ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6-வது நகராட்சியாக சோளிங்கர் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக சோளிங்கர் உள்ளது. சுமார் 9.5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நகரம் சுமார் 34 ஆயிரம் மக்கள் தொகையுடன் பேரூராட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. சோழர்கள் ஆட்சியில் சோழ சிம்மபுரமாகவும், பிற்காலத்தில் சோழலிங்கபுரமாகவும் பின்னர் சோழிங்கராகவும் மாறியுள்ளது.

பல்வேறு சிறப்புகள் மிக்க சோளிங்கரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. பல்வேறு அரசியல் காரணங்களால் தள்ளிக்கொண்டே வந்தது. சோளிங்கர் தனி வட்டம், கல்லூரி என பல தடைகளை தாண்டி திட்டங்கள் வந்துள்ள நிலையில் தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் சோளிங்கர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே வாலாஜா, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் என 5 நகராட்சிகள் உள்ளன. தற்போது, 6-வது நகராட்சியாக சோளிங்கர் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சோளிங்கர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வதால் இனி அதிகப்படியான நிதியும், புதிய திட்டங்களும் வரும் என்பதால் சோளிங்கர் பெரிய அளவில் வளர்ச்சிடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சோளிங்கர் நகர காங்கிரஸ் தலைவர் கோபால், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘சோளிங்கர் நகராட்சியாக தரம் உயர்த்தியது உள்ளபடியே மகிழ்ச்சி. சோளிங்கர் அருகில் உள்ள பாண்டியநல்லூர், புலிவலம் கிராம ஊராட்சிகள் சோளிங்கர் நகராட்சி எல்லையுடன் இணைக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.

தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதிகள் நகராட்சியுடன் இணைவதால் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும். இந்தகிராம ஊராட்சிகளில் இருப்புத் தொகையே ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தொகையை செலவழிக்க முடியாமல் உள்ளனர். எனவே, நகராட்சியாக தரம் உயர்வதால் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்கள் மேம்படும்’’ என தெரிவித்தார்.

இதுகுறித்து சோளிங்கர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கூறும்போது, ‘‘பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் நகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன் பிறகு மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சிப் பணிகள் படிப்படியாக செயல்படுத்தப்படும்’’ என தெரி வித்தார்.