தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி என 4 இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும் தொழில்துறையில் பின்தங்கியிருக்கும் 9 மாவட்டங்களில் சிப்காட் பூங்கா அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
திமுக அரசு பொறுப்பெற்று முதல் பட்ஜெட்டை இன்று கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறைகள் மீதான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அதன்படி தொழில்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
தொழில்துறை குறித்த நிதியமைச்சரின் அறிவிப்புகள்:
சென்னையில் ஓ.எம்.ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை தகவல் தொழில்ட்நுட்பத்துறை பெருவழியாக வளர்ச்சியடைவதற்கு 2000ம் ஆண்டில் கருணாநிதி தொடங்கி வைத்த டைடல் பூங்கா முக்கியமானதாகும்.
இப்போது தமிழகத்தின் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.
முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்கா உருவாக்கப்படும்.
தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம்,நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும்
கோவையில் 225 கோடி ரூபாய் மதிப்பில், 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டத்தில் 4500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதம், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 1100 ஏக்கர் பரப்பில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அறைகலன்களுக்கான (ஃபர்னிச்சர்) சர்வதேச பூங்கா அமைக்கப்படும்
திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூரில் மின் வாகனப் பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்கா
மணப்பாறை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் உணவுப் பூங்கா
தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை
ஓசூரில் 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை
சென்னை நந்தப்பாக்கம் மற்றும் காவனூரில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும், முதல்கட்டமாக நந்தம்பாக்கத்தில் 165 கோடி ரூபாய் முதலீட்டில் நிதிநுட்ப நகர் அமைக்கப்படும்.