👉 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை மறைந்தார்.

👉 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

👉 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

👉 1690ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.

👉 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி புளூட்டோ ஒரு கிரகம் இல்லையென அறிவிக்கப்பட்டது.

👉 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.

பிறந்த நாள் :-

நாரண.துரைக்கண்ணன்
👉 தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.

👉 இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தனது பத்திரிகையில் தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலேய அரசு அவரைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தாலும், எங்கள் கொள்கையை விடமாட்டோம், இது எங்களது தேசியக் கடமை எனத் துணிச்சலுடன் அறிவித்தார்.

👉 தமிழ்ச் சிறுகதை மன்னன் எனப் போற்றப்படும் புதுமைப்பித்தனோடு நட்புறவு கொண்டிருந்தார். அவர் இறந்த பிறகு நண்பர்களின் உதவியோடு நிதி திரட்டி, புதுமைப்பித்தனின் மனைவியிடம் ஒரு பகுதியைப் பணமாகவும் மீதித் தொகையைக் கொண்டு சென்னை அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார்.

👉 மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். இவர் நற்கலை நம்பி, இலக்கியச் செம்மல் என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். வாழ்க்கைக் கலைஞர் என்று மு.வ.வால் போற்றப்பட்ட நாரண.துரைக்கண்ணன் 1996-ல், 90-வது வயதில் மறைந்தார்.

ராஜகுரு
👉 சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ராஜகுரு 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் கேடா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ஷிவ்ராம் ஹரி ராஜகுரு.

👉 இவர் 1919-ல் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பிரிட்டிஷ் அரசு மீது வெறுப்புக் கொண்டு 16-வது வயதில், சந்திரசேகர ஆசாத் மூலமாக இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அமைப்பில் இணைந்தார்.

👉 பிறகு இவரை சிறந்த போர் வீரராக மாற்றினார் ஆசாத். புரட்சிப் படையில் பகத்சிங் மற்றும் சுகதேவ் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பராக மாறினார்கள். மூவரும் சந்திரசேகர ஆசாத்துடன் இணைந்து லாலா லஜ்பத்ராயின் படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சான்டர்சனை 1928-ல் சுட்டுக்கொன்றனர்.

👉 அதன்பின் 1929-ல் புனேயில் ஒரு கவர்னரை கொல்ல முயற்சி செய்தபோது போலீஸாரிடம் பிடிபட்டார். மற்ற வீரர்களுடன் இவரையும் லாகூர் சிறையில் அடைத்தனர்.

👉 அப்போது வழக்கின் முடிவில் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய சமயத்தில் மக்களின் ஆவேசத்தால் அச்சமுற்ற ஆங்கிலேய அரசு, குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள் மாலையே யாருக்கும் தெரிவிக்காமல் அவசரமாக 1931-ம் ஆண்டு மார்ச் மாதம் தண்டனையை நிறைவேற்றியது.