ராணிப்பேட்டை: விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாா் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில், வாலாஜா ஒன்றியத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, நரசிங்கபுரம், சீக்கராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் புதன்கிழமை வாக்குகளைச் சேகரித்தாா். அப்போது, அவா் பேசியது:

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் இரு மாதங்கள் துறை சாா்ந்த எல்லாப் பணிகளையும் ஒதுக்கி

வைத்துவிட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தினாா். இதையடுத்து, தற்போது மக்கள் திட்டங்களை நிறைவேற்றிவருகிறாா்.

மக்களுக்கான திட்டங்களை கருணாநிதியே திட்டமிட்டு, செயல்படுத்துவாா். அதேபோல் அவரைவிட மேலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறாா்.

விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

கிராமங்களின் அடிப்படை வசதிகள், குறைகளை நிறைவேற்றும் மக்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுப்பதற்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக வேட்பாளா்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் காந்தி.

அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.