2009ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் ஆதார் கார்டு மற்றும் ஆதார் எண் பல சேவைகளை எளிதாகப் பெற ஒரு முக்கியக் கருவியாக மாறியுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இந்த ஆதார் கார்டுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஆதார் கார்டு அனைத்து சேவைகளுக்கும் மிகவும் முக்கியமான ஆவணமாகப் பார்க்கப்படும் காரணத்தால் மக்களின் தினசரி வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில் இனி ஆதார் இல்லாமல் இந்த 10 விஷயத்தைப் பெற முடியாது.


வெளிநாட்டுப் பயணம்

நீங்கள் இந்திய குடிமகனாக இருக்கும் போதும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமாயின் கட்டாயம் பாஸ்போர்ட் தேவை, அதேபோலத் தான் தற்போது ஆதார் கார்டும். தற்போது புதிதாகப் பாஸ்போர்ட் பெறுவோரும் சரி, பாஸ்போர்ட்-ஐ ரினிவல் செய்ய வேண்டும் என்றாலும் சரி ஆதார் கட்டாயம் தேவை.


கல்வி

நீங்கள் கல்லூரியில் சேர வேண்டுமென்றாலும் சரி, அல்லது நீட்டி, ஐஐடி ஜேஈஈ போன்ற போட்டி தேர்வுகள் எழுத வேண்டும் என்றாலும் கட்டாயம் ஆதார் கார்ட்-ஐ முக்கிய ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இந்த நடைமுறை இந்தியாவில் பெரும்பாலான கல்வி அமைப்புகள் மற்றும் பல்கலைகழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

வங்கி சேவை

வங்கி கணக்கு இல்லாமல் தற்போது பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளோம், நாளுக்கு நாள் பணமாகச் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இப்படியிருக்கும் போது வங்கி கணக்கைத் திறக்க கட்டாயம் ஆதார் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.


பிஎப் கணக்கு

மாத சம்பளக்காரர்கள் அனைவருக்கும் பிஎப் கணக்குக் கட்டாயம் இருக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள அறிவிப்பின் படி உங்கள் பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் நிறுவனங்கள் வழங்கப்படும் பிஎப் தொகையை டெப்பாசிட் செய்யப்படாது. இதுமட்டும் பிஎப் கணக்கு தொடர்புடைய பிற சேவைகளைப் பெற கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

சமையல் சிலிண்டர்

இன்று சமையல் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லாத நிலையில், சிலிண்டர் புக் செய்யவும், சிலிண்டருக்கான மானியத்தைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் அரசு நிறுவனம் என்பதால் அனைத்து நிறுவனத்திலும் ஓரே விதிமுறை தான்.


பென்ஷன்

பென்ஷன் தொகை பெறுவதில் இருந்து பென்ஷன் திட்டங்களின் அனைத்து விதமான சேவைகளைப் பெற வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


ரேஷன் கடைகள்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை உடனும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும், இல்லையெனில் ஒவ்வொரு மாதம் ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்க முடியாது.

ரேஷன் கடைகளில் தற்போது பல்வேறு நல திட்டங்கள் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் காரணத்தால் ரேஷன் ஸ்மார்ட் கார்டு உடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்றாலோ அல்லது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்றாலோ ஆதார் கார்டு கட்டாயம்.

பான் கார்டு

மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி பான் எண் உடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30க்கள இணைக்கப்படவில்லை என்றால் பான் எண் ரத்துச் செய்யப்படும். எனவே பான் எண் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டாயம் ஆதார் உடன் பான் எண் இணைக்க வேண்டும்.

என்ஆர்ஐ

என்ஆர்ஐ-கள் இந்தியாவில் வங்கி கணக்கு திறக்க வேண்டும் என்றால் இந்தியாவில் 182 நாட்கள் காத்திருந்து அதன் பின்பு ஆதார் கார்டு பெற வேண்டும். ஆனால் ஆகஸ்ட் 2021ல் வந்த புதிய உத்தரவு மூலம் என்ஆர்ஐகள் இனி ஆதார் கார்டு பெறுவதற்காக 182 நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை.


ரியல் எஸ்டேட்

இதேபோல் இந்தியாவில் நீங்கள் எவ்விதமான ரியல் எஸ்டேட் பணிகளைச் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் கட்டாயம். வீடு வாங்குதல், நிலம் வாங்குதல், வீடு கட்ட அனுமதி வாங்குதல் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம்.


அனைத்திற்கும் ஆதார்

அதேபோல் அரசு சேவைகள் பெறவோ அல்லது தனியார் துறைகள் ஆவணங்கள் கேட்டாலோ அனைத்திற்கும் ஆதார் கார்டு-ஐ பயன்படுத்தலாம். குறிப்பாக முகவரி, வயது, பாலினம் போன்ற தரவுகளை உறுதி செய்ய ஆதார்-ஐ பயன்படுத்தலாம்.