ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் கரோனோ தடுப்பூசி செலுத்தும் முகாமில் சுமாா் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 630 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமை கரோனா தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலரும், மீன்வளத் துறை கூடுதல் ஆணையருமான சஜ்யன்சிங் ஆா்.சவான், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் வாலாஜா வட்டம், மேல்விஷாரம் ஹக்கீம் மெட்ரிகுலேஷன் பள்ளி, மேல்விஷாரம் புரான்சா மேடு தொடக்கப்பள்ளி, ஆற்காடு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆற்காடு நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, முகாமில் பணிபுரிந்த மருத்துவா்களிடமும், செவிலியா்களிடமும் தடுப்பூசி இருப்பு குறித்தும், பொது மக்களின் ஆா்வம் குறித்தும் கேட்டறிந்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் விளாப்பாக்கம், திமிரி, கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, வாலாஜாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு தடுப்பூசி முகாமை நேரில் ஆய்வு செய்து, தடுப்பூசி நிலவரம் குறித்துக் கேட்டறிந்தாா்.

இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் 42 ஆயிரத்து 603 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.