அரக்கோணம் நகரில் உள்ள வணிக நிறுவனம், சிறு, குறு வியாபாரம், நடைபாதைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அரக்கோணம் நகர் முழுவதும் நகராட்சி ஆணையாளர் ( பொறுப்பு ) ஆசீர்வாதம், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் நேற்று துண்டுபிரசுரங்கள் வழங்கினர். 
அப்போது, வரும் 11ம் தேதிக்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது 13ம் தேதி நகராட்சியில் இருந்து குழுவினர் கடைகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது, கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று காட்ட வேண்டும். 

கொரோனா தடுப்பூசி போடவில்லை என தெரியவந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படும் அல்லது கடைகளுக்கு அபராதம் விதித்தல் அல்லது 'சீல்' வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். 

நெமிலி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வணிகநிறுவனங்கள், சிறு குறு வியாபார நிறுவனங்கள், நடைபாதை கடைகள், சாலையோர கடைகள், தேநீர் கடைகள், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வரும் 11 ம் தேதிக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். 

இல்லை யெனில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என தெரிவித்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், நெமிலி தாசில்தார் ரவி , பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.