ஓலா தனது மின்சார ஸ்கூட்டரான Ola S1 விற்பனையை இன்று அதாவது செப்டம்பர் 8 முதல் தொடங்கியுள்ளது. ஓலா நிறுவனம் தனது விற்பனையை இன்று துவக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. உலக EV தினம் (World EV Day) கொண்டாடப்படும் வேளையில் தனது S1 ஸ்கூட்டரின் விற்பனையை துவக்க ஓலா முடிவெடுத்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இன்று முதல் தொடக்கம்

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) தனது ஓலா எஸ் 1 மின்சார ஸ்கூட்டரை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு அதன் விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கத் தொடங்கினர். நிறுவனம் தனது ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆன்லைன் விற்பனையை 8 செப்டம்பர் 2021 முதல், அதாவது இன்று முதல் தொடங்குகிறது.

ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் விலை என்ன?

இந்த இரண்டு மின்சார ஸ்கூட்டர்களின் (Electric Scooter) விலைகளையும் ஓலா எலக்ட்ரிக் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ் 1 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .99,999 ஆகவும், எஸ் 1 ப்ரோ வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .1,29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

EMI எவ்வளவு இருக்கும்?

ஓலா எலக்ட்ரிக் வெளியிட்ட அறிக்கையில், எஸ் 1 ஸ்கூட்டருக்கான EMI மாதம் ரூ. 2,999 முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எஸ் 1 ப்ரோவிற்கு, EMI ரூ .3,199 முதல் தொடங்கும். ஓலா மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி உதவியில் ஆதரவாக இருக்க, OFS (Ola Financial Service), ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, எச்டிஎப்சி மற்றும் டாடா கேபிடல் உள்ளிட்ட முன்னணி வங்கிகளுடன் இணைந்துள்ளது.

வாகன காப்பீட்டிற்கு, வாடிக்கையாளர்கள் ஓலா மற்றும் ஓலா எலக்ட்ரிக் செயலிகள் மூலம் ஸ்கூட்டர்களை காப்பீடு செய்யலாம். நிறுவனத்தின் காப்பீட்டு பங்குதாரர் ஐசிஐசிஐ லோம்பார்ட் ஆகும்.

விரைவாக கிடைக்கும் நிதி உதவி

எச்டிஎப்சி வங்கி, ஓலா மற்றும் ஓலா எலக்ட்ரிக் செயலிகளில் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்களிலேயே முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன்களை வழங்கும். ஓலா வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா கேபிடல் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி டிஜிட்டல் கேஒய்சி -ஐ செயலாக்கும் என்றும் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன் ஒப்புதலை அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிதி உதவி தேவை இல்லாத வாடிக்கையாளர்கள், ஓலா எஸ் 1-க்கு ரூ.20,000, ஓலா எஸ் 1 ப்ரோ-வுக்கு ரூ.25,000 முன்பணம் செலுத்தலாம். மீதமுள்ள தொகையை ஸ்கூடரின் இன்வாய்ஸ் செய்யப்படும்போது செலுத்தலாம்.

அடுத்த மாதம் முதல் டெலிவரி தொடங்கும்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் படி, ஸ்கூட்டரின் விநியோகம் அக்டோபர் 2021 முதல் தொடங்கும். இந்த மாதம் முதல், நிறுவனம் டெஸ்ட் ரைடயைம் வழங்கும். டெஸ்ட் ரைட் செய்த பிறகு ஆர்டரை கேன்சல் செய்யும் வசதியும் உள்ளது. ஆனால், நீங்கள் புக் செய்த ஸ்கூட்டர் ஓலா தொழிற்சாலையில் இருந்து டெலிவரிக்கு அனுப்பப்படாமல் இருந்தால் தான் கேன்சல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

181 கிமீ வரம்பு


ஓலா மின்சார ஸ்கூட்டரின் (Ola Electric Scooter) எஸ் 1 வேரியன்ட் முழு சார்ஜில் 121 கிமீ தூரத்துக்கான வரம்பை வழங்குகிறது. எஸ் 1 ப்ரோ வேரியன்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கிமீ செல்லும். எஸ் 1 வேரியன்ட் 3.6 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டுகிறது. எஸ் 1 ப்ரோ வேரியண்ட் 3 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டுகிறது.