வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணம் செய்யும் நேரத்தையும் வீணாக்க கூடாது என்று, விமானத்திலேயே அரசுக் கோப்புகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அது தொடர்பாக, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடு சுற்றுப் பயணங்கள் அத்தனையையும் ரத்து செய்து பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு உலகம் முழுக்க நோய் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


வாஷிங்டன்னில் மோடி

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் இன்று வாஷிங்டன் சென்று அடைந்தார் . அங்கு மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. நியூயார்க் நகரில் நடைபெறும் ஐநா பொது சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ம் தேதி பங்கேற்க இருக்கிறார். இது பிரதான அலுவல். இதைத் தவிர்த்து பல்வேறு பிற பணிகளிலும் மோடி பங்கேற்பார். மூன்று நாட்கள் மோடி அமெரிக்காவில் இருப்பார்.

பெரிய தாடி

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கெட்அப் வித்தியாசமாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் நரேந்திர மோடி தாடி பெரிய அளவில் வளர்ந்து காணப்பட்டது. வேலைவாய்ப்புகளை வளர்க்க வேண்டுமே தவிர இந்த தாடியை வளர்க்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்யும் அளவுக்கு நிலைமை போனது.

தாடி ட்ரிம்

இப்போது அமெரிக்கா சென்றபோது நரேந்திரமோடி தனது தாடியை ட்ரிம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளார். எனவே மோடிக்கு சில வயது குறைந்தது போல தோற்றம் தருகிறது.

விமானத்தில் ஃபைல் பார்த்த மோடி

இதனிடையே நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில், மிக நீண்ட பயணத்தின் போது அதை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு அரசாங்க கோப்புகளை அவர் பார்வையிடுவது போல அந்த படத்தில் காட்சியுள்ளது.

நெட்டிசன்கள் கருத்து

இதனிடையே நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர். அரசு பணி செய்வதை இவ்வாறு வெளிப்படையாக காட்டிக் கொள்ள வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். கோப்பு அடியிலிருந்து செல்போன் ஒளி வீசுகிறது, மோடி கையிலுள்ள கோப்பு இடது பக்கம் இருக்கிறது, ஆனால் அவர் கண்கள் வலதுபக்கம் பார்க்கிறது என்பது போலவெல்லாம், படத்தை ஜூம் செய்து கட்டுரை எழுதும் அளவுக்கு போய் விட்டனர் நெட்டிசன்கள்

சர்தார் வல்லபாய் பட்டேல்


இன்னும் ஒருபடி மேலே போய் , 1949ஆம் ஆண்டு சர்தார் வல்லபாய் பட்டேல், விமானத்தில் பயணிக்கும்போது கோப்புகளை பார்வையிட்டார் என்று புகைப்படம் வெளியிட்டுள்ளதை கவனிக்க முடிகிறது. இவ்வாறு இந்த புகைப்படம் தற்போது இணையதளம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது.