ஆசிரியர் தினத்தை ஒட்டி இன்று (செப்.05) வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழில் முதலமைச்சர் படம் இடம்பெறவில்லை.

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது சான்றிதழ் 2007ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் படத்துடன் வழங்கப்பட்டு வந்தது.

முதலமைச்சர் படம் இல்லாத பாராட்டு சான்றிதழ்

ஆனால் நடப்பு ஆண்டில் சிறந்த ஆசிரியர்களுக்கு இன்று (செப்.09) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருது சான்றிதழில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் முதலமைச்சர் படம் இடம்பெறவில்லை.

சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருது பெற்று கொண்ட ஆசிரியர்

சிறந்த ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வுச் செய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான விருதுகள் தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

மாற்றங்களை நோக்கி பயணிக்கும் முதலமைச்சர்

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். அதன் அடிப்படையில் 2020-21ஆம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை.

சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழ்

அரசின் முத்திரையும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் படமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது ஆசிரியர்களின் மத்தியில் இன்று கவனத்தை ஈர்த்தது.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கும் என 342 ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பணியாற்றும் 33 ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் 10 விரிவுரையாளர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் 2 பேர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் 15 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாவட்டங்களில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.