திருவலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கக்கோரி கிராமமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த அம்முண்டி ஊராட்சியில் 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 2,045 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை ஊராட்சிதேர்தலின்போது தலைவர் பதவிக்கு பொதுப்பிரிவினர் போட்டியிட ஒதுக்கப்பட்டு வந்ததாம். ஆனால் , தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அம்முண்டி ஊராட்சியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் அம்முண்டி சந்தைமேடு பகுதியில் கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்த திருவலம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீ சார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். 
அப்போது கிராம மக்கள் கூறுகையில், 'அம்முண்டி ஊராட்சி மன்றதலைவர் பதவியை பட்டியல் இனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி கலெக்டர், தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஊராட்சியில் 2,045 வாக்குகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, மீண்டும் பொதுப்பிரிவுக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் வேட்புமனு தாக்கல் செய்யவோ அல்லது வாக்களிக்கவோ எதிர்ப்பு தெரிவிப்போம். மேலும், எங்களது ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைப்போம்' என தெரிவித்தனர். 
அதற்கு போலீசார், அதிகாரிகளை சந்தித்து முறைப்படி மனு அளியுங்கள். ஆர்ப்பாட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து, கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத் தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.