இன்று நாம் காண இருப்பது, எந்தப் பூஜையோ, ஸம்ஸ்காரங்களோ அவற்றின் முடிவில், நமது ஆத்மார்த்த சமர்ப்பணத்தை இறைவனிடம் சொல்லிக் கொள்கின்ற ஒரு ஸ்லோகம்.
இதை அறியாதவர்களே இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அடியேன் அறிந்தே இருக்கிறேன்.
ஆம்..
"விஷ்ணு சஹஸ்ரநாம" பாராயணத்தின் முடிவில் வருகின்ற அதே ஸ்லோகம்தான்...
"காயேன வாசா மனஸேந்த்ரியை வா
புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி"
இதன் பொருளையும் அறிந்தவர்கள் அனேகர் இருக்கக்கூடும்..
இருந்தாலும் அறியாத ஓரிருவருக்காக இந்த ஸ்லோகத்தைப் பதம் பிரித்து பொருள் தருகிறேன்.
காயேன − உடலாலோ
வாசா − வாக்கினாலோ
மனஸ் − மனதினாலோ
இந்த்ரியை (வா) − இந்த்ரியங்களினாலோ
புத்தி − அறிவினாலோ
ஆத்மனா (வா) ஆத்மாவினாலோ
ப்ரக்ருதே ஸ்வபாவாத் −
இயற்கையான குணவிஷேஸத்தினாலோ
யத்யத் − எதுஎதைச்
கரோமி − செய்கின்றேனோ
ஸகலம் − அவை அனைத்தையும்
பரஸ்மை நாராயணா இதி − பரமபுருஷனாகிய நாரயணனுக்கே
ஸமர்ப்பயாமி − ஸமர்ப்பிக்கிறேன் (அர்ப்பணிக்கிறேன்)
இப்படிச் சொல்லி முடிக்கின்றோம்!
இது வெறும் வாய் வார்த்தைக்காகச் சொல்வது அல்ல!
உணர்வு பூர்வமாய்ச் சொல்ல வேண்டும்!
அதைச் சொல்கின்ற நாம், எவ்வளவு ஜாக்ரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு க்ஷணம் சிந்திப்போம்..
நமக்கு ப்ரியமானவர்களுக்கு ஒன்றைத் தரும் போது, அதில் நாம் அசிரத்தையைக் காட்டுவோமோ?..
பார்த்துப் பார்த்து அல்லவா தேர்ந்தெடுத்து அளிப்போம்!
அப்படி, இந்தப் பிறவியோடு சம்பந்தம் முடிந்து போகின்ற உறவுகளுக்கே, இவ்வளவு ச்ரத்தை(அக்கறை) எடுக்கின்ற நாம், எத்தனையோ பிறவிகளாய் உறவில் சம்பந்தப் பட்டிருக்கும் அந்த இறைவனுக்கு ஒன்றை அளிக்கும் போது, எவ்வளவு ஜாக்ரதையாக இருக்க வேண்டும்!
நாம் கொடுக்கின்ற நைவேத்யப் பொருட்களை அவன் எதிர்பார்ப்பதே இல்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம்!
அவை, நம் ஆசைக்காக, நாமே அவனுக்குக் கொடுப்பவை.
அவன் எதிர்பார்ப்பதெல்லாமே, இந்த த்ரிகரண சுத்தியே!(மனம், வாக்கு, காயம் என்ற முக்கரணத் தூய்மை).
ஆத்மார்த்தமாக, ப்ரியத்தோடு நாம் தருகின்ற எதையும் ஏற்றுக்கொள்ள அவன் ஸித்தமாக இருக்கிறான்..
பகவத்கீதையில் கண்ணனின் திருவாக்கும் அதுதானே!
"பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்யா ப்ரயச்சதி"
"ஒரு இலையோ, பூவோ, கனியோ, ஒரு துளி நீரோ,
எதை நீ ப்ரீதியோடும் பக்தியோடும் தருகிறாயோ, அதை நான் அங்கீகரிக்கிறேன்"..
இதுதான் மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்..
இவ்வளவு எளிமையானவனுக்கு, இனிமையாய் நம்மையே அளிப்போமே..
இனி, வெறுமே, "காயேன வாசா.." என்று சொல்லாமல், உணர்ந்து, நெகிழ்ந்து, ஒரு துளி விழி நீருடன்
, நம்மை, அவன் திருவடிகளில் அர்ப்பணிப்போம்!..