தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்த 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. கள்ளக்குறிச்சி, தென்காசி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடக்க உள்ள நிலையில் என்னென்ன நடத்தை விதிகள் இந்த உள்ளாட்சி தேர்தலின் போது பின்பற்றப்படும் என்று பார்க்கலாம்... இந்த 9 மாவட்டங்களை சேர்ந்த மக்கள், அரசியல் தலைவர்கள் பின்வரும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். 9 மாவட்டங்களுக்கும் இதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

பணம்


தேர்தல் விதியின்படி, பொதுமக்களோ, வியாபாரிகளோ, அரசியல் கட்சியினரோ 50 ஆயிரத்திற்கும் அதிகமாக பணத்தை கையில் எடுத்து செல்ல கூடாது. அப்படியே எடுத்து சென்றாலும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே அவசர தேவைக்கு பணம் எடுத்து செல்லும் மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றால் தனிப்பட்ட வகையில் 1 லட்சம் ரூபாய் தனி செலவிற்காக வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் இதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும்.


வேறு என்ன பண விதிகள்?

தனிப்பட்ட வகையில் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். அதற்கும் மேல் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும். இதனால் பண பரிவர்த்தனை செய்யும் மக்கள் இதை எல்லாம் கவனமாக செய்ய வேண்டும். ஆர்பிஐ உதவியுடன் தேர்தல் ஆணையம் இதை தொடர்ந்து கண்காணிக்கும். அதேபோல் வங்கிகளும் தங்கள் பரிவர்த்தனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்து செல்லலாம். இதற்கு உரிய வங்கி ஆவணங்கள் இருக்க வேண்டும்.

பிரச்சார விதிகள்

உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்பவர்கள் சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்சனைகளை, கிளர்ச்சிகளை உண்டாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட கூடாது. வழிபாட்டு தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ள கூடாது. சாதி மதம் அடிப்படையில் பிரச்சாரங்களை மேக்ரோல் கூடாது.தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை மேற்கொள்ள கூடாது. பொய்யான தகவல்களை திரித்து பிரச்சாரத்தில் பேச கூடாது.

கவனம்

உங்கள் வீடுகளுக்குள் வந்து பிரச்சாரம் செய்ய நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே முடியும். உங்கள் அனுமதி இன்றி கட்சியினர் வீட்டிற்குள் வந்து வாக்கு சேகரிக்க கூடாது. அதேபோல் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் அதில் நீங்கள் பயணம் செய்ய கூடாது. அது கட்சி விதிமீறல் மட்டுமின்றி பயணம் செய்யும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கிற்கு பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் விதிமீறல் ஆகும்.

அனுமதி

உங்கள் வீட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கு சின்னம் வரைய வேண்டும், கொடி நட வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் குறிப்பிட்ட கட்சியினர் அனுமதி பெற்று இருக்க வேண்டும். பொது கூட்டங்களில் ஸ்பீக்கர்களை பயன்படுத்தவும், வாகனங்களில் ஸ்பீக்கர்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யவும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். பேரணிகளை நடத்த அனுமதி பெற வேண்டும். அதே சமயம் பணம் பெற்றுக்கொண்டு பேரணிகளில் கலந்து கொள்ள கூடாது.

நேரம்

காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் மட்டுமே அனுமதி பெற்ற ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பவர்கள் ஐந்து பேருக்கு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.