புரட்டாசி மாதம் நிறைய பேர் வீடுகளில் புரட்டாசி மாதம் முடியும் வரை அசைவம் சமைக்க மாட்டார்கள். ஆன்மீக ரீதியாக பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம், அசைவம் சாப்பிடுவதை சில குடும்பத்தில் தவிர்ப்பார்கள். 

இது புண்ணியம் சேர்க்க கூடிய காரியம்தான். இது ஒரு பக்கம் இருக்கட்டும்‌. ஆனால் நம்முடைய முன்னோர்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புண்ணியமான இந்த புரட்டாசி மாதத்தை நம்முடைய முன்னோர்கள் இப்படி தான் சொல்லுவார்கள். புரட்டாசி மாதத்தில் “பொன்னுருக காயும். மன்னுருக பெய்யும்”. இதற்கான அர்த்தம் என்ன தெரியுமா.

அதாவது இந்த புரட்டாசி மாதத்தில் அடிக்கும் வெயில் கட்டித் தங்கத்தை உருக்கி விடும். அந்த அளவிற்கு நெருப்பு போல வெயில் சுட்டெரிக்கும். சித்திரை மாத வெயில் என்றால் கூட நேரடியாக நம்முடைய மண்டையை பிளக்கும். ஆனால் இந்த புரட்டாசி மாத வெயிலை நாம் அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடம்பில் இருக்கக்கூடிய நீர்ச்சத்தை அனலின் மூலமாகவே இழுத்துக் கொள்ளும் தன்மை இந்த புரட்டாசி மாத வெய்யிலுக்கு உண்டு.

சரி, பகலில் இப்படி வெயில் அடிக்குதே, இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை. பகல் நேரம் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மேலே, இரவு நேரத்தில் மழை கொட்டும். இந்த மழைத் தண்ணீரில் எந்த நெருப்பிலும் உருகாத மண் கூட, உருகி தண்ணீரோடு கரைந்து ஓடிவிடும். இதுதான் இந்த பழமொழிக்கு உண்டான அர்த்தம்.

புரட்டாசி மாதத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும். அதே சமயம் மழைக்காலமும் தொடங்கக் கூடிய நேரம் இது. வெயிலும் மழையும் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த சீதோஷண நிலை, வெயில் காலத்தை விட மிக மிக மோசமானது. இந்த சமயத்தில் அசைவ சாப்பாட்டை சாப்பிட்டால் நம்முடைய உடலில் சூடு அதிகமாகிவிடும். தேவையற்ற உடல் உபாதைகள் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால் தான் இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லி வைக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்காக ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் நமக்கு வரலாற்றின் மூலம் சொல்லப்பட்டு இருந்தாலும், அறிவியல் ரீதியாக புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.