அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் மட்டுமே அம்முண்டி ஊராட்சியில் வசிக்கும் நிலையில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

செப்டம்பர் 22 ஆம் தேதி மாலையுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட மனுத்தாக்கல் செய்யாமல், வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் அம்முண்டி ஊராட்சியில் தேர்தல் ரத்தாகி உள்ளது.

இதனிடையே, அம்முண்டி கிராம மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி தேர்தலில் போட்டியிடுவதற்கான இட ஒதுக்கீட்டை பொதுப்பிரிவினருக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர்.


அது தொடர்பான விசாரணை செப்டம்பர் 22 ஆம் தேதியான இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாலு மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வேந்திரன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.


விசாரணையின் முடிவில் நீதிபதி, "மனுதாரர் அளித்த மனுவின் மீது உரிய பதிலை 12 வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அளிக்க வேண்டும். அடுத்த ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், " என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.