புதியதாக மண் அடுப்பு

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் புரட்டாசி மாதம் பிறக்கப் போகிறது என்றாலே எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு ஒருவித பரபரப்புத் தொற்றி கொள்ளும். அதுவரை பயன்படுத்திய பாத்திரங்களை எல்லாம் மூட்டை கட்டி ஏற்றி விட்டு, சைவம் மட்டுமே சமைக்க உதவும் வேறு பாத்திரங்களை இறக்கி வைத்து கழுவி சுத்தம் செய்து புழங்குவார்கள். மண் அடுப்பை முழுமையாக சிதைத்துவிட்டு, புதியதாக மண் அடித்து வேறு ஒரு அடுப்பு செய்து மெழுகி...ஏறக்குறைய வீட்டையே புதிதாக மாற்றி வைத்து விடுவார்கள் பெரியவர்கள்.

தளிகை வழிபாடு

ஒரு மாதத்துக்கு அசைவம் கிடையாது, அதிகாலை எழுந்து பஜனை கோயிலுக்குச் சென்று பக்தி கோஷம் வேறு போட வேண்டும் என்ற மலைப்பே சிறுவர், சிறுமியர்களுக்கு புரட்டாசி மீது ஒரு வெறுப்பை உண்டாக்கிவிடும். ஆனால் அதற்கெல்லாம் பரிகாரம் போல புரட்டாசி சனிக்கிழமை தளிகை வழிபாடு எங்கள் வீட்டில் சிறப்பாக நடைபெறும். இரண்டாம் வார சனிக்கிழமைதான் எங்களுக்குத் தளிகை வழிபாடு செய்யும் வழக்கம். முதல் நாளே மாவிளக்குப் போட, அதிரசம் செய்ய என மாவிடிக்கத் தொடங்குவார்கள், அப்போதே தளிகை விழா தொடங்கிவிடும்.

அதிகாலை வழிபாடு

தலு போடுவது என்று சொல்லப்படும் புரட்டாசி தளிகை வழிபாடு அதிகாலையிலேயே அமர்க்களப்படும். வரிசையாக எல்லோரும் குளித்து முடித்துவிட்டு பெருமாளை வணங்கிவிட்டு பெண்கள் சமையல் வேலை பார்க்கத் தொடங்கி விடுவார்கள். ஆண்கள் எல்லோரும் பெருமாள் துதிகள், புராணம் என ஏதாவது பாராயணம் செய்ய ஆரம்பிப்பார்கள். காலை எந்த உணவும் கிடையாது. எல்லோருமே முழு உபவாசம். இருந்தாலும் குழந்தைகள் பசி தாங்காது என்று எங்களுக்கு மட்டும் 'அடுப்பில் ஏற்றாத பண்டங்களை' உண்ணக் கொடுப்பார்கள். அநேகமாக அது பழங்களாக இருக்கும்.

மடிப்பிச்சை

என் பாட்டி பழங்களை மட்டும் உண்ணலாம் என்ற பெயரில் நாலைந்து வாழைப்பழங்கள், பேரீச்சை, கொய்யா என்று உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கும். 'பாட்டி இதுக்கு நீ சோறே சாப்பிடலாம், இதுக்கு பேரு உபவாசமா என்று கேலியும் கிண்டலும் செய்வோம். எல்லாம் பாட்டிக்கு காது கேட்காது என்ற தைரியம்தான்! 10 மணி வாக்கில் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் எல்லாம் பளபளவென்று விலக்கிய பித்தளை, வெண்கல செம்புகளைக் கொடுத்து மடிப்பிச்சை கேட்க அனுப்புவார்கள் பெரியவர்கள்.


கோவிந்தா கோவிந்தா கோஷம்

சிறு குழந்தைகளுக்கு அது வேடிக்கை என்பதால் உடனே கிளம்பிவிடும். கொஞ்சம் விவரம் தெரிந்த பிள்ளைகள், போக மாட்டேன் என்று முரண்டு பிடித்து நிற்கும். 'இதெல்லாம் தெய்வ குத்தமாகிடும், நான் வேண்டிக்கிட்டேன். நீ போய்த்தான் ஆகணும்' என வசவு விழுந்த பிறகு குழந்தைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு தெரிந்த வீடுகளுக்கு மட்டும் போய் வாசலில் நின்று 'கோவிந்தா கோவிந்தா...' என்று கோஷம் போட்டு அரிசியும் சில்லறைகளையும் வாங்கி வருவோம்.

திருப்பதி உண்டியல்

வாங்கி வந்த அரிசி அன்று சமையலில் சேர்த்துக் கொள்ளப்படும். சில்லறை காசுகள் திருப்பதி உண்டியலுக்குப் போகும். மதிய தளிகை உணவுதான் எங்கள் வீட்டில் ஸ்பெஷல். அநேகமாக எல்லா காய்கறிகளும் அந்த உணவில் இருக்கும். அவியல், கூட்டு, பொரியல், வதக்கல், அப்பளம், வடை, பருப்பு பாயசம், தயிர், இனிப்பு வெண்ணெய், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் என கமகமவென சமையல் அறையில் வாசனைப் புறப்பட புறப்பட பசி வயிற்றைக் கிள்ளும். சமையல் அறைக்குப் போனால் அம்மா விரட்டுவாள். 'இது என்ன இன்னைக்கு இப்படி அலையுதுங்க. மத்த நாளில் கெஞ்சினாலும் சாப்பிடாதுங்க. இன்னைக்கு பறக்குதுங்க...' என்று வியப்பாள். எல்லா பண்டிகைகளிலும் இது நடக்கும்.

கற்பூரம் ஏற்றுதல்

ஒரு வழியாக எல்லோரும் கூடி திருப்பதி பெருமாளுக்கு தளிகை போடுவார்கள். பெரிய பெரிய கட்டி கற்பூரம் வைத்து பெரியவர்கள் ஆரத்தி காட்டுவார்கள். எல்லோரும் கோவிந்தா கோஷம் போட்டு உணர்ச்சி வசப்பட்டு கலங்குவார்கள். பசியில் இருக்கும் நாங்கள், யாராவது கூடுதலாகக் கற்பூரத்தைத் தட்டில் போட்டால் மனதுக்குள்ளேயே திட்டுவோம். எப்போ கற்பூரம் அணையறது, நாங்க எப்போ சாப்பிடுறதுன்னு!

காக்கைக்கு சோறு

எல்லாரும் சாமி கும்பிட்டு முடிந்ததும், எங்கள் பாட்டி படையல் போட்டுள்ள இலையில் எல்லா உணவுகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைவார்கள். தயிர், வெண்ணெய் தொடங்கி கூட்டும் பொரியலும் பாயசமும் சேர்ந்த அந்தக் கலவை சாதம் முதலில் காக்கைக்கு வைக்கப்படும். காக்கா சோறு எடுத்த பிறகுதான் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பதால் கூட்டம் போட்டு 'காகா... காகா...' என்று கத்தி வரவிருக்கும் ஒன்று இரண்டு காக்கைகளையும் விரட்டிவிடுவோம். பசி பொறுக்காத பாட்டி, 'சரி விடுங்க... பித்ருக்களுக்கு எல்லாம் திருப்தி போல, அதான் வரலன்னு' சமாதானம் செய்து கொண்டு சாப்பிடப் போவார்கள். அடித்துப் பிடித்து இலையில் அமர்ந்து அந்தக் கலவை தளிகை உணவைச் சாப்பிடுவோம். ஆஹா... இன்றுவரை எந்த வகை உணவுக்கும் கிடைக்காத பேரின்ப சுவையும் வாசமும் என்னவோ அந்த தளிகை உணவுக்குக் இருக்கும். அதிலும் அப்பளமோ வடையோ சேர்ந்து வரும் சோறு சொர்க்கம் என்றே சொல்லலாம்.

நினைவுகூரல்

நினைக்க நினைக்க ஏக்கம் கிளம்பும் இந்தப் புரட்டாசி சனிக்கிழமை தளிகை இன்னும் நடக்கிறதா தெரியவில்லை. சனிக்கிழமைகளில் நானும் தேடி தேடி பார்க்கிறேன், எந்த குழந்தையும் செம்பைத் தூக்கிக் கொண்டு வருவதே இல்லை. எல்லாம், அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்!