ஆற்காடு அருகே ஒரே சேலையில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆற்காடு


ஆற்காடு அருகே ஒரே சேலையில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டிட தொழிலாளர்கள்


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த காவனூர் அருகே உள்ள வெங்கடாபுரம் கொட்டாம்புலி சந்து கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். காவனூரை அடுத்த வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரிதா (36). இவருக்கும் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சரிதா கட்டிட சித்தாள் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பாரதி மற்றும் சரிதா ஆகிய இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இதையறிந்த இவர்களது குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் இவர்களது கள்ளத்தொடர்பை கைவிட்டதாக தெரியவில்லை.

தூக்கில் தொங்கினர்


இந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று அதிகாலை திமிரியை அடுத்த காவனூர் அருகே உள்ள வெள்ளகுளம் மலையடிவாரத்திற்கு சென்றனர். அங்குள்ள வேப்பமரத்தில் ஒரே சேலையால் இருவரும் தூக்கிப்போட்டு பிணமாக தொங்கினர்.

ஒரே சேலையில் இவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் புங்கனூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கும், திமிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திமிரி போலீசார் 2 பேர் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை தவிக்கவைத்து விட்டு இருவரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.