ஆற்காடு வட்டார வேளாண்மை துறையின் அத்மா திட்டத்தின் கீழ் சக்கரமல்லூர் கிராமத்தில் நடந்த விவசாயிகளுக்கு பண்ணை கழிவு வேளாண்மை பயிற்சி முகாமிற்கு ஆற்காடு வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.ராமன் தலைமை தாங்கினார். அத்மா திட்ட மேலாளர் ஜி.மோகனசுந்தரம் வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளராக விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பி.வீரமணி கலந்துகொண்டு பண்ணைக் கழிவுகளை மக்கும் உரமாக மாற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையற்ற தென்னை நார் போன்றவற்றை மக்கவைத்து அதன் மூலம் உரமாக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். 

அதனைத் தொடர்ந்து முன்னோடி விவசாயி எஸ்.சண்முகராமன் தென்னைமர சருகுகள் , கரும்பு தோகைகளை மக்க வைத்தல் குறித்து செயல்முறை விளக்கமளித்து காட்டினார். அதனைத் தொடர்ந்து ஆற்காடு துணை வேளாண்மை அலுவலர் ஆர்.கண்ணன் மத்திய , மாநில அரசின் வேளாண் திட்டங்கள் குறித்தும், உலக தென்னை தினத்தை முன்னிட்டு தென்னைமரசாகுபடியின் சிறப்புகள் குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். 

முகாமில் அத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆர்.ராஜேஷ்குமார், ஆர்.தாமோதரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் இ.ருக்கு நன்றி கூறினார்