பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை:


பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாப்பேட்டை அணைக்கட்டு நீர்த்தேக்கத்தில் இருந்து காவேரிப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும், தமிழக ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பொன்னை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சித்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 4,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளநீர் மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலந்து ராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் வாலாஜாப்பேட்டை அணைக்கட்டை நிரப்பி வருகிறது.

வாலாஜாப்பேட்டை அணைக்கட்டில் இருந்து மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரிக்கு 818 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 122 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 73 கன அடி, தூசி ஏரிக்கு 409 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது வாலாஜா அணைக்கட்டுக்கு வரும் நீரின் வரத்து மற்றும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.