கலவகுண்டா அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை


ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து 2,500 கன அடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பொன்னை அணைக்கட்டு முழுமையாக நிரம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றம் வெப்பச்சலனத்தின் காரணமாக வட தமிழகம் மற்றும் அதையொட்டிய ஆந்திர மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆற்றை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இதற்கிடையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கலவகுண்டா அணை தொடர் மழை காரணமாக முழுமையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து, கலவகுண்டா ஆணையில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் இன்று (செப்.4) திறக்கப்பட்டுள்ளது. இதனால், பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னை தடுப்பணையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கடந்து சென்றது. மேலும், பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட ஏரிகள் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழைக்குப் பிறகு பொன்னை அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் முழுமையாக வெளியேறி ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர கிராமங்களில் வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழையளவு விவரம்:


வேலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பொன்னை பகுதியில் 28.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குடியாத்தம் 3, காட்பாடி 9.30, மேல் ஆலத்தூரில் 7.40, வேலூர் 9.40, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 9.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக நெமிலியில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணத்தில் 14.60, ஆற்காட்டில் 12.10, வாலாஜாவில் 11.80, அம்மூரில் 6.20, சோளிங்கரில் 8.20, கலவையில் 13.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை


பொன்னை அணைக்கட்டிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் தற்போது வெளியேறுவதைத் தொடர்ந்து பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான
1. மருதம்பாக்கம்
2. ஏகாம்பரநல்லூர்
3. கொண்டகுப்பம்
4. சீக்கராஜபுரம்
5. நரசிங்கபுரம்,
6. லாலாப்பேட்டை,
7. தெங்கால்
8. காரை
9. திருமலைச்சேரி,
10. பூண்டி
11. குடிமல்லூர்
12. சாத்தம்பாக்கம்
13. விசாரம்
14. ஆற்காடு
15. சக்கரமல்லூர்
16. புதுப்பாடி
ஆகிய கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் யாரும் ஆற்றைக்கடக்க வேண்டாம் எனவும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.