அக்டோபர் மாதம் முதல் மாறவிருக்கும் விதிமுறைகள்.


ஒவ்வொரு மாதமும் பல்வேறு புதிய விதிமுறைகள், புதிய சட்டங்கள் உள்ளிட்டவை அறிமுகப்படுவது வழக்கம். இவை பெரும்பாலும் அதற்கு அடுத்த மாதம் அமல்படுத்தப்படும். இதுபோக, விலை ஏற்ற இறக்கம் போன்றவையும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் செயல்படுத்தப்படும். இவ்வகையில், அக்டோபர் முதல் மாறவிருக்கும் விதிகளை பற்றி பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் விலை


ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படும். சில முறை ஒரே மாதத்தில் இரண்டு முறை கூட சிலிண்டர் விலை மாற்றப்படும். தற்போது சிலிண்டர் விலை மிக அதிகமாகவே உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் சிலிண்டர் விலை மீண்டும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்சன் விதிகள்


பென்சன் வாங்குவோரின் டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் (Digital life certificate) சார்ந்த விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் மாறவிருக்கிறது. இதன்படி, 80 வயதுக்கு மேற்பட்ட பென்சனர்கள் இனி டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ்களை, தலைமை தபால் அலுவலகங்களில் (Head post office) உள்ள ஜீவன் பிரமாண மையங்களில் சமர்ப்பிக்கலாம்.

செக் புக் விதிகள்


ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் ஏற்கெனவே வெவ்வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன. எனவே, இம்மூன்று வங்கிகளின் பழைய செக் புத்தகங்கள், MICR codes அக்டோபர் மாதம் முதல் செல்லுபடியாகாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்டோ டெபிட்


நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட சந்தா வசூலிக்கும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்டோ டெபிட் (Auto debit) முறையில் கட்டணம் வசூலிக்கின்றன. அதாவது, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் வசூலித்துக்கொள்ளப்படும். ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி இவ்விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இனி வாடிக்கையாளரின் ஒப்புதலுக்கு பிறகே பணம் எடுக்கப்படும்.