45வது ஜிஎஸ்டி கூட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இக்கூட்டத்தில் பல பொருட்களுக்கு வரிக் குறைப்பு செய்துள்ளது, இதேபோல் சில பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டும் உள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 4 வருடங்களுக்கு அதிகமான காலம் ஆன நிலையிலும் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி குழு ஒவ்வொரு கூட்டத்திலும் பல சரக்கு மற்றும் சேவைக்கான வரியை தொடர்ந்து மாற்றி வருகிறது. இதைச் சரி செய்ய முக்கியமான முடிவுகளும் இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.
சரி இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்..

1. டிசம்பர் 31 வரையில் கொரோனா தொற்றைக் குணப்படுத்தும் முக்கியமான மருந்துகளான Amphotericin B,Tocilizumab ஆகியவற்றுக்கு 0 சதவீத வரியும், Remdesivir, Heparin, Itolizumab, Posaconazole, Infliximab, Favipiravir, Casirivimab & Imdevimab, 2-Deoxy-D-Glucose, Bamlanivimab & Etesevimab ஆகிய மருந்துகளுக்கு 5 சதவீதம் வரியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வரி டிசம்பர் 31 வரையில் நடைமுறையில் இருக்கும்.

2. உடல் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் பைக்குகளில் பொருத்தப்படும் வீல் அமைப்புக்கு (Retro fitment kits) 5 சதவீதம் வரியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

3. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய வலுவூட்டப்பட்ட அரிசி தானியங்களுக்கான (fortified rice kernels) ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.Advertisement

4. கேன்சர் நோயை குணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றான Keytruda என்ற மருந்துக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5. எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கு டீசலில் கலக்க உதவும் பயோ டீசல் மீதான வரியை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளார்.

6. இரும்பு, தாமிரம், அலுமினியம், துத்தநாகம் மற்றும் இதர உலோக தாதுக்கள் மீதான வரியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக்க உயர்த்தப்பட்டு உள்ளது.

7. அட்டை பெட்டி, பாக்ஸ், பேக், பேப்பர் பேக் ஆகியவற்றுக்கு 12 மற்றும் 18 சதவீத வரி இருந்த வேளையில் தற்போது அனைத்திற்கும் 18 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

8. பாலியூரிதீன் மற்றும் இதர பிளாஸ்டிக்-ன் வேஸ்ட் மற்றும் ஸ்கிராப் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் உயர்த்தப்பட்டு உள்ளது.

9. அனைத்து பேனா-க்களுக்கும் 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் பேப்பர் பொருட்களான கார்டு, கேட்லாக், மற்றும் பிரிட்டிங் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

10. ரயில்வே பாகங்கள், லோகோமோட்டிவ் பொருட்கள் மற்றும் பிரிவு 86 கீழ் இருக்கும் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

11. Muscular atrophy என்னும் மோசமான நோய்க்கான மருந்துகள் விலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், இதற்கான வரியுடன் சேர்ந்து சுமார் 16 கோடி ரூபாயாக உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்படும் நிலையில் தனி நபர் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் Zolgensma மற்றும் Viltepso-க்கு உட்பட இந்த நோயைத் தீர்க்கும் மருந்து அனைத்திற்கும் முழுமையாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிடத்தக்கது.

12. இந்தியா பங்களாதேஷ் நாடுகள் மத்தியிலான சரக்குப் போக்குவரத்திற்கு 0 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

13. செங்கல் சூளைகள் 20 லட்சம் ரூபாய் வரையிலான வர்த்தகத்திற்குச் சிறப்பு இணைப்புத் திட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் இருந்தால் 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், இன்புட் டாக்ஸ் கிரெடிட் இல்லையெனில் 6 சதவீத வரியும் விதிக்கப்பட உள்ளது. இது 1.4.2022 முதல் நடைமுறைக்கு வரும்.

14. ஜிஎஸ்டி தளத்தில் இருக்கும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் இன்புட் டாக்ஸ் கிரெடிட் ரீபண்ட் பெற முடியாத காரணத்தால் கப்பல் மற்றும் விமானம் மூலம் சரக்குகளை ஏற்றுமதி செய்யப்படுவோருக்குச் செப்டம்பர் 30 வரையில் ஜிஎஸ்டி வரி முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

15. நேஷனல் பர்மிட் வாயிலான சரக்குப் போக்குவரத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி இருக்கும் நிலையில் தற்போது அது 0 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

16. AFC பெண்கள் ஆசிய கப் 2022 தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரித் தற்போது 0 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

17. படம், சவுண்ட் ரெக்கார்டிங், ரேடியோ, டிவி ஷோ ஆகியவற்றை ஒளிபரப்பத் தேவையான லைசென்ஸ் சேவைகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

18. IRFC மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு மத்தியில் குத்தகைக்கு விடப்படும் திட்டத்திற்கு இருந்த வரிச் சலுகை திரும்பப்பெறப்பட்டு உள்ளது.

19. கூடுதலான சேர்க்கைகள் இல்லாத மருதானி பவுடர் மற்றும் பேஸ்ட்-க்கு 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி

20. இனிப்பு சுபாரி மற்றும் சுவையூட்டப்பட்ட மற்றும் பூசப்பட்ட ஏலக்காய் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

21. பழச்சாறு கலந்த கார்பனேடெட் டிரிங் மற்றும் கார்பனேடெட் டிரிங்-ல் கலக்கப்பட்ட பழச்சாறு என இருவகையான ஜூஸ்-களுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி மற்றும் 12 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது.

22. யூபிஎஸ் மற்றும் வெளியில் பயன்படுத்தும் பேட்டரி-க்கு 18 சதவீதம் வரி, இதேபோல் லித்தியம் அயன் பேட்டரி அல்லாதவற்றுக்கு 28 சதவீத வரி

23. பழங்களுக்கு 5 சதவீத வரியும், உலர்ந்த பழம் மற்றும் நட்ஸ்-களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என ஜிஎஸ்டி அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

24. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் கிட்சன் சேவைகள் ரெஸ்டாரென்ட் சர்வீஸ் பிரிவில் சேர்க்கப்பட்டு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

25. ஐஸ்கிரீம் பார்லர்-களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்-களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி

26. மதுபானம் உணவு பிரிவில் சேராது. ஆனால் மதுபானம் உடன் வரும் உணவு மற்றும் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களைய ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு அடுத்தச் சில வாரத்தில் இரு அமைச்சர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு அமைச்சர் குழு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து 2 மாதத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இரண்டாவது அமைச்சர் குழு ஈ-வே பில், பாஸ்ட் டேக், டெக்னாலஜி, இணக்கம், கலவை திட்டங்களில் இருக்கும் பிரச்சனைகளில் ஆய்வு செய்து 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளை விரைவாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது என மத்திய நிதியமைச்சரும், ஜிஎஸ்டி அமைப்பின் தலைவருமான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.