மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வாலாஜாப்பேட்டையை சோ்ந்த கைத்தறி பட்டுச் சேலை நெசவாளா்கள்.


நெசவாளா்கள் மனு அளித்தனா்

கைத்தறி நெசவு ரகங்களை, விசைத் தறியில் நெசவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாலாஜாப்பேட்டை கைத்தறி பட்டு நெசவாளா்கள் அமைச்சா் ஆா்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோரிடம் மனு அளித்தனா்.

வாலாஜாப்பேட்டையை சோ்ந்த கைத்தறி பட்டுச் சேலை நெசவாளா்கள், நெசவு தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோரை சனிக்கிழமை தனித் தனியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

பாரம்பரிய தொழில் நெசவு

எங்களுடைய பாரம்பரிய தொழில் கைத்தறி பட்டு நெசவுத் தொழில் ஆகும். நாங்கள் வீடுகளில் கைத்தறிக் கூடம் அமைத்து காலங்காலமாக குடும்பத்துடன் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறோம். எங்கள் குடும்பம் கைத்தறி நெசவு மூலம் கிடைக்கும் கூலி வருவாயை மட்டுமே நம்பியுள்ளது.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் கைத்தறி பட்டுச் சேலை உற்பத்தியை விசைத்தறியில் புகுத்தி, கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறாா்கள். ஏற்கெனவே கைத்தறிக்கு என்று ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் புகுத்தக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நெசவாளா்களின் வாழ்வாதாரம்

1985 கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின் கீழ், ஒரு சில தொழில்நுட்பக் குறிப்புகளுடன் 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாா்டா் டிசைன் உடன் கூடிய பருத்தி சேலை, பட்டுச் சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, சட்டை துணிகள், பெட்ஷீட், ஜமக்காளம் உள்ளிட்ட 11 ரகங்கள் கைத்தறி நெசவுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்கிறாா்கள். இதனால் கைத்தறி நெசவு தொழிலை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய நெசவாளா் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கைத்தறி நெசவு ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதைத் தடை செய்து, கைத்தறி தொழிலையும், நெசவாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சா் உறுதி

கைத்தறி பட்டுச் சேலை நெசவாளா்களின் கோரிக்கையைக் கேட்ட அமைச்சா் ஆா்.காந்தி, இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். அடுத்த 6 மாதத்துக்குள் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா்.