பசுமைமயமாகும் ரயில்துறை!


இந்திய ரயில்வே, 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

ரயில் பயணம்

இந்திய ரயில்களில் தினசரி பல லட்சம் மக்கள் குறைந்த கட்டணத்தில் நாடெங்கும் பயணித்து வருகின்றனர். 13 ஆயிரம் ரயில்கள் 67 ஆயிரத்து 956 கி.மீ தொலைவுக்கு சென்று பல்வேறு தொலைதூர நகரங்களை இணைக்கின்றன. இப்படி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சற்றே குறைவானதுதான். பொதுப்போக்குவரத்திற்காக 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 115.45 லட்சம் கிலோ லிட்டர் அதிவேக டீசலை ரயில்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரயில்களை மின்மயாக்கும் திட்டம்

2019/20 காலகட்டத்தில் டீசல் ரயிலில் 43 சதவீத பயணிகளும், மின்சார ரயிலில் 57 சதவீத பயணிகளும் பயணித்துள்ளனர். 2000ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை டீசல் ரயிலில் பயணிக்கும் மக்களின் சதவீதம் 43.5லிருந்து 35.3 சதவீதமாக குறைந்துள்ளது. ‘’’எதிர்வரும் 2030ஆம் ஆணடு முதல் ரயில்வே துறை கார்பன் வெளியீடே இல்லாத துறையாக மாறும். இந்தவகையில் நாம்தான் முதல் பசுமை ரயில்துறை கொண்ட நாடா மாறவிருக்கிறோம்’ என்று ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.20,260 கோடி ரூபாய் ரயில்களை மின்மயாக்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கார்பன் மற்றும் எரிபொருட்களின் செலவு

ரயில்துறை மின்மயமாக்கப்பட்டு புதுப்பிக்கும் ஆற்றல் ஆதார வளத்திற்கு செலவிடுவதன் மூலம் இரண்டு பயன்கள் உள்ளன. ஒன்று, ரயில்கள் மூலம் வெளியாகும் கார்பன் வெளியீடு பெருமளவு குறையும். அடுத்து, ரயிலை இயக்குவதற்காக இறக்குமதி செய்யும் எரிபொருட்களின் செலவு கட்டுப்பாட்டிற்குள் வரும். மூன்றில் இருபங்கு பயணிகள் மின்ரயில்களில் பயணிக்கும்படி சூழல் மாறினால், அரசுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ரூ.13,510 கோடி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கி ரயில்வேதுறை ஹெட் ஆன் ஜெனரேஷன் (HOG) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்பன் வெளியீட்டைக் குறைத்து வருகிறது.

சூரிய மின்னாற்றல்

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பினாவில் சூரிய மின்னாற்றல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல்களைப் பதித்து அதன் மூலம் 1.7 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை அரசு கடந்த ஆண்டில் தொடங்கியது. பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தின் உதவியுடன் இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் மின்னாற்றலின் மூலம் ரயில்களை இயக்குவது ரயி்ல்வேதுறையின் திட்டம்.

ரயில் நிலையங்களின் வருங்கால திட்டம்

சத்தீஸ்கர், ஹரியாணா மாநிலங்களிலும் சூரிய மின்னாற்றல் நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. இவை முழுமையான செயல்பாட்டிற்கு இன்னும் சில ஆண்டுகளில் வந்துவிடும். நாட்டிலுள்ள 960 ரயில்நிலையங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நிலையத்தின் மின்சாரத் தேவையை நிறைவு செய்துகொள்ளலாம். இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏராளமான சவால்கள் இருந்தாலும், கார்பன் வெளியீடு இன்றி சரக்குகளை அனுப்பவும், மக்கள் பயணிக்கவும் வாய்ப்பு எதிர்காலத்தில் உள்ளது.